ஈரான் தலைவர் ஆயத்துல்லா அலி கமனெய் அந்நாட்டின்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலில் மாண்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்துள்ளார்.
அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திடம் இஸ்ரேலிய மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஈரானியத் தலைவருடன் மேலும் பல மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இஸ்ரேலின் இரண்டு தொலைகாட்சி நிறுவனங்கள் மறைந்த ஈரானியத் தலைவரின் உடல் புகைப்படமாக அமெரிக்க அதிபருக்கும், இஸ்ரேலியப் பிரதமருக்கும் காட்டப்பட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானியத் தலைவருடன் புரட்சிக் காவல் படையின் முக்கியத் தலைவர்களும் அணுவாயுதத் தயாரிப்புக்கான உயர் அதிகாரிகளும் தாக்குதலில் மாண்டுவிட்டனர் என்று இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தோரில் ஈரான் தற்காப்பு அமைச்சர் அமிர் நஸிர்சாடே, புரட்சிக் காவல் படையின் தளபதி முகம்மது பக்பொர் ஆகியோரும் அடங்குவர்.
ஈரானிய ஊடகங்கள், தலைவர் அயத்துல்லாவின் மருமகனும் மருமகளும் தாக்குதலில் மாண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளன.
இந்த செய்திகளைக் கேட்டு ஈரானியத் தலைநகரில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து வரும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்கா இராணுவ, அணுவாயுதத் தளங்களையும் இஸ்ரேல் ஈரானியத் தலைமைத்துவத்தையும் குறிவைத்துள்ளன என்று நம்பப்படுகிறது.
பதிலடியாக ஈரான் இஸ்ரேல் உள்பட அமெரிக்க இராணுவத் தளவாடங்கள் உள்ள ஏழு மத்தியக் கிழக்கு நாடுகள்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதில் இதுவரை பெரும் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
