கட்டுநாயக்காவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 13பேர் சபரிமலை சென்றனர்!
சபரிமலை அழைத்துச் செல்வதாக மோசடி!யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் நிர்க்கதி!
விமான டிக்கட் இல்லை என்று ஏஜன்ஸிக்காரர் கையை விரித்ததால் பக்தர்கள் கட்டுநாயக்க பன்சலையில் நான்கு நாள்களாகத் தங்கியிருக்கும் சோகம்!
பலாங்கொடையிலிருந்து 26 பக்தர்களை சபரிமலை யாத்திரைக்கென பஸ்ஸொன்றில் அழைத்து வந்த குருசாமி ஒருவர், விமான நிலையம் வந்ததும் டிக்கட் கிடைக்கவில்லை என்று கையை விரித்துள்ளார்.
இவ்வாறு கடந்த ஆறாந்திகதி கட்டுநாயக்க விமான நிலையம் அழைத்துவரப்பட்டவர்கள் கடந்த நான்கு நாள்களாக கட்டுநாயக்கவில் உள்ள பன்சலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மலைக்குருவிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆறாந் திகதி முதல இன்று நாளை என்று யாத்திரிகர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இதுவிடயமாகப் பொலிஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
பொலிஸார் தலையிட்டு ஏஜன்சிக்காரரைப் பிடித்து விசாரித்தபோது இன்று மாலை செல்லும் வகையில் டிக்கட் பெற்றுக்கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
எனினும், அதுவும் நிச்சயம் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் மலைக்குருவிக்குத் தெரிவித்தார்.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த இந்த ஏஜன்சிக்காரர், முதலில் டிக்கட் பெற்றுத் தருவதாகக் கூறித் தலைமறைவானதாகவும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
சபரிமலை யாத்திரையை அண்மையில் அரசாங்கம் புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்தது. இதற்குப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னின்று உழைத்திருந்தார்.
புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் இம்முறை கூடுதலான பக்தர்கள் யாத்திரை செல்ல முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சில ஏமாற்றுப் பேர்வழிகள் மோசடியில் இறங்கியிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களின் உடனடி கவனத்திற்கு மலைக்குருவி கொண்டு வருகிறது.
வி. அருள்செல்வன்
