கண்டி பன்விலை விக்கினேஸ்வரா தமிழ் மகாவித்தியாலய பெற்றோர் மேற்கொள்ள இருந்த ஆர்ப்பாட்டமொன்றை பன்விலை பொலிஸார் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினர்.
பாடசாலை மைதானத்தின் நடுப்பகுதியில் வீதி ஒன்றை அமைப்பதற்காக ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், பெற்றோர், பழைய மாணவர், மாணவர் இணைந்து இன்று காலை (29) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு மைதானத்தில் ஒன்று கூடினர். அந்த ஆர்ப்பாட்டத்தைப் பன்விலை பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தி பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
எதிர்வரும் முதலாம் திகதி பிரதேச செயலாளர், பொலிஸார், பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர், பெற்றோர்கள், மத்திய மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் சந்திப்பு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்தும் அந்தச் சந்திப்பின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கலாம் எனப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததையடுத்தும் பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
பாடசாலை மைதானத்தைக் கடந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கிராம சேவகர் அலுவலகத்திற்கும் சில குடியிருப்புகளுக்கும் செல்ல வேண்டியிருப்பதைக் காரணமாகக் காட்டி, மைதானத்தின் மத்தியிலே பாதையொன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்குப் பாடசாலை நிர்வாகம், பொதுமக்கள், மாணவர், பழைய மாணவர் ஆகியோர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தப் பாதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அதனை நிரந்தரமான பாதையாக மாற்றுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த பொதுமக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மைதானத்தைச் சேதப்படுத்தும் அல்லது அதன் நடுவே பாதை அமைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு எதிராக தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்களும் பழைய மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
மலைக்குருவி



