சர்வதேச மகளிர் நாளையொட்டி மத்திய மாகாண உடபளாத்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெண்களுக்குப் பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கெகுலந்த, தொரகல கிராம சேவகர் பிரிவிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குடும்பப் பெண்களுக்குப் பல்வேறு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. குடும்பப் பெண்களுக்கு சமையலறைப் பாத்திரங்களும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான சுகாதார பாவனைப் பொருள்களும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையில் உடபளாத்த பிரதேச செயலாளர் ஆத்மா தில்ருக்ஷி ஜயரட்ணவின் வழிகாட்டலின் கீழ் சமுர்த்தி உத்தியோகத்தர் மாரிமுத்து யோகேஸ்வரனின் ஏற்பாட்டில் கிராம சேவகர் S.சசிந்தவின் ,பங்கேற்றலுடன் பெறுமதியான உதவிப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
புசல்லாவை ஓல்ட் பீகொக் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற உதவிப் பொருகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் தொரகல, நிவ் பீகொக், சப்லி, ஓல்ட் பீகொக், சப்லி ஜனபதய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்களும் குடும்பப் பெண்களும் உதவிப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட தித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மகளிருக்கே மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக சமுர்த்தி உத்தியோகத்தர் மாரிமுத்து யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்






