கொட்டகலை – மேபீல்ட் தோட்டத்தில் தோட்டக் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (21) பிரட்டுக்களத்தில் ஏற்பட்ட சர்ச்சை,களேபரத்தில் தோட்டத் துரைமார் மீது சாணத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இச் சம்பவம் குறித்து திம்புள்ளை பத்தனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மேபீல்ட் பெருந் தோட்ட முகாமையாளர் தோட்டத் தொழிலாளர்களை மிகவும் அடிமைத் தனமாக நடத்தி வருவதாகவும் தொடர்ந்து தொழிலாளர்களைப் பழிவாங்கும் நோக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தோட்டத்தில் பணியாற்றி வரும் காவலாளி தாக்கப்பட்டு கொட்டகலை வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை தோட்ட பிரட்டுகளத்தில் காவலாளி தாக்கப்பட்டமை சம்பந்தமாக எழுந்த வாக்குவாதத்தில் தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர் மேற்பார்வை அதிகாரிகள் மீது மாட்டுச் சாணத்தால் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிரிவுகளில் உள்ள சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளர்? மேற்பார்வை அதிகாரி ஆகியோரை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து இந்தப் பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



