கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவை, மத்திய, ஊவா,தென் ஆகிய மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்குக் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு (Amber Alert) விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 வரை அமுலில் இருக்கும். எதற்கும் தயாராக இருங்கள்!
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்காலிகமாக சில பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் வீட்டிற்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் தங்குவதுடன், மரங்களுக்கு அடியில் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கம்பி மூலம் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
