மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் வி. ஜெயக்குமார் இன்று 24-06-2024 மணிவிழா காண்கிறார்.
தனது அர்ப்பணிப்பான கல்விச் சேவையால் மலையகத்தில் தனிப்பெரும் இடத்தினைச் சொந்தமாக்கிக் கொண்ட அதிபர் வி. ஜெயக்குமார் 2026.06.24 ஆம் திகதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
தனது 36 வருட பாடசாலைக் கல்விச் சேவையில் தனித்துவமான கணித ஆசிரியராக, உதவி அதிபராக, பிரதி அதிபராக, அதிபராக மாத்தளை,கண்டி மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரிய ஜெயகுமார், பன்முக ஆளுமை கொண்டவராவார்.
மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியின் பிரதி அதிபரான இவர் சிறந்த கணித ஆசிரியராக மட்டுமன்றி, திறமையான பேச்சாளராகவும் அறிவிப்பாளராகவும் தமிழ் ஆர்வலராகவும் சமய, ஆன்மீக சிந்தனையாளராகவும் விளங்குகின்றார்.
பாடசாலைகளில் ஒழுங்கமைப்புத் திறன் மிக்கவராகவும், வளங்களைப் பெற்றுத் தரும் திறன் மிக்கவராகவும், மாணவர்களை ஊக்குவிக்கும் சிறந்த கல்வியாளராகவும் திகழ்ந்துள்ளார்.
கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் வழிகாட்டியாக இருந்துள்ளார். இன்று அவரின் மாணவர்கள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் தலைசிறந்த நபர்களாகவும் விளங்குகின்றனர்.
பாடசாலைகளில் பல்வேறு கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து மாணவர்களின் உயர்விற்காக வழிகாட்டியவர் வி. ஜெயக்குமார் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதிலும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
இவர் பல மென் திறன்களைக் (Soft Skills) கொண்டவராகவும், அனைவருடனும் அன்புடனும் பண்புடனும் கண்ணியத்துடனும் பழகும் மனிதநேயமிக்க நற்பண்பாளராகவும் திகழ்கின்றார். கண்டியில் பிறந்து மட்டக்களப்பில் கல்வி கற்று பின்னர் மாத்தளையில் கல்விச் சேவையாற்றி இன்று ஓய்வு பெறுகின்றார்.
இவர் விசேட பயிற்சி பெற்ற கணித ஆசிரியராகவும், (SLPS I) தரம் I அதிபராகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் டிப்ளோமா பட்டதாரியாகவும், சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி டிப்ளோமா பட்டதாரியாகவும், சர்வதேச மனித உரிமை டிப்ளோமா பட்டதாரியாகவும் திகழ்கின்றார்.
இவரது ஆரம்பக் கல்வி மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வி மட்டக்களப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் அமைந்திருந்தது. கணித விஞ்ஞானத் துறையில் உயர்கல்வி கற்றுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த காலஞ்சென்ற க. வீரசிங்கம், திருமதி கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான ஜெயக்குமார் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பல்வேறு ஆக்கங்களை வெளியிட்ட மறைந்த கல்விமான் வித்துவான் அருள் செல்வநாயகத்தின் மருமகனும் ஆவார்.
இவர் மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலாமன்றத்தின் கௌரவ உறுப்பினராகவும், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தேர்தல் குழு உறுப்பினராகவும் சமூகப்பணியாற்றி வருகின்றார்.
இவரது 36 வருட கல்விச் சேவையில் 17 வருடங்கள் மாத்தளை இந்து தேசியக் கல்லூரியிலும், 10 வருடங்கள் மாத்தளை பாக்கியம் தேசியக் கல்லூரியிலும், ஏனைய 9 வருடங்கள் கண்டி – வத்தேகமை கல்வி வலயப் பாடசாலைகளிலும் பணியாற்றியுள்ளார்.
இவ்வேளையில், இவரது ஓய்வுக் காலம் சிறக்கவும், ஆரோக்கியம், ஆனந்தம் மற்றும் நீண்ட ஆயுள் பெற்று வாழ்வும் பெற பாடசாலை சமூகமும் கல்விச் சமூகமும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்

