தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை மீறி, நுவரெலியா மாவட்ட கொத்மலை கல்வி வலயத்தில் உள்ள கலாபுவனம் தமிழ் வித்தியாலய கணிதப் பாட ஆசிரியர் ஆர். அசோக்குமாருக்கு வழங்கப்பட்ட கட்டாய இடமாற்றத்தை உடனடியாக நிறுத்துமாறு ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஆர். அசோக்குமார் முதல் நியமன காலத்தில் அந்தப் பாடசாலையில் 2 வருடங்களும் 10 மாதங்களும் மட்டுமே சேவையாற்றியுள்ள நிலையில், தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை சுற்றறிக்கை இல 2007/20-க்கு முரணான வகையில் அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்தபோது, கல்வி அதிகாரிகளினாலும் ஆசிரியர் ஆலோசகரினாலும் அவர் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயம் தொடர்பான விசாரணை (2026.05.15) ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர் குமுதினி வித்தான,ஆணைக்குழு அதிகாரி கே. நளினி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
விசாரணையின் போது, தமக்குத் தேவையானவர்களுக்காக இடமாற்ற கொள்கைகளை மீறி அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது என ஆணைக்குழுவினர் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்ததுடன், கட்டாய இடமாற்றத்தை நிறுத்துவதற்கான கடிதத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.
இவ்விசாரணையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வே. இந்திரசெல்வன், கி.யோகாராஜா, கொத்மலை இடமாற்ற சபை உறுப்பினர் க.கீர்த்திராஜா, ஹட்டன் இடமாற்ற சபை உறுப்பினர் சி.ரூபன், நுவரெலியா மாவட்ட உறுப்பினர் பெ.பாலா ஆகியோர் முன்னிலையாகினர்.
கொத்மலை கல்வி வலயப் பணிப்பாளர் சார்பாக நிர்வாக,திட்டமிடல் பணிப்பாளர் கலந்துகொண்டார்.
அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக இலங்கை ஆசிரியர் சங்கம் என்றும் முன்னிற்கும் என்பதுடன் இதற்காக ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இந்தத் தீர்ப்பு முழு ஆசிரிய சமூகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என நுவரெலியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் வேலு இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார்.
செய்தித் தொகுப்பு: வேலு இந்திரசெல்வன், செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்கம் (நுவரெலியா மாவட்டம்).
