உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு இன்றாகும்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு நாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாள்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததையே கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
இயேசுவின் துன்பப்படுதல், மரணம், உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த 40 நாள் தவக்காலமும் இன்றைய உயிர்த்த ஞாயிறு தினத்துடன் நிறைவடைகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட அவர், இன்றைய தினத்தில் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்குக் காட்சியளித்ததாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி நடைபெறும் திருப்பலிகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
