அருச்சுனா எம். பீயின் அநாகரிகப் பேச்சை நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கிளிநொச்சியில் வாழ்கின்ற தமிழ் மக்களை இழிவுபடுத்திப் பேசிய அர்ச்சுனா எம் பீயை ஒரு மலையக ஊடகவியலாளனாகத் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தியாகு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
முன்பு பாராளுமன்றத்திற்குள் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய அருச்சுனா எம்பீ, தற்போது வெளியில் பகிரங்கமாக இழிவுபடுத்தியுள்ளார். கிளிநொச்சியில் வாழ்பவர்கள் மத்திய நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கொச்சைப்படுத்தியுள்ளார்.
மலையக மக்கள் இந்த நாட்டினது முன்னேற்றத்திற்கும்,அர்ச்சுனா கற்ற இலவசக கல்வி கிடைப்பதற்கும், உழைத்து தங்களுடைய இரத்தத்தை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காகவே சிந்தியவர்கள்.
எனவே, அவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசுவதற்கு அர்ச்சுனா எம்பீக்கு எந்தத் தகுதியும் கிடையாது. மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏன் மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்? என்று கேள்வி எழுப்பியுள்ள திரு. தியாகு,
மலையக மக்களுக்காகக் குரல் கொடுப்பதாக, உயிரை விடுவதாகக் கூறுகின்ற சமூக அமைப்புகள், பொது அமைப்புகள் யாவும் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன? என்றும் இடித்துரைத்துள்ளார்.
எனவே, தங்களுடைய மலையக சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து அர்ச்சுனா எம்.பீ மலையக மக்களை இழிவாகப் பேசியமைக்கு எதிராக சட்டத்தின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். என்றும் திரு. தியாகு அழைப்பு விடுத்துள்ளார்.
