மேற்கு வங்கத்தில், வீட்டு வேலை செய்து மாதம் 2,500 ரூபாய் சம்பாதித்து வந்த கலிதா மாஜி என்ற பெண், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கி, அவுஸ்கிராம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்.
கலிதா மாஜி, 1,07,692 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணமுல் காங்., வேட்பாளர் ஷ்யாமா பிரசன்னாவை 12,535 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதன் மூலம், தேர்தல் அரசியலில் நுழைந்து எளிய மக்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டிஉள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில், அறுதி பெரும்பான்மை பலத்துடன் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று 15 ஆண்டுகால மம்தாவின் திரிணமுல் காங்., ஆட்சிக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ.,வின் இந்த வெற்றிக்கு இணையாக, அவுஸ்கிராம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கலிதா மாஜியின் வெற்றியும் பேசப்படுகிறது. குஷ்காரா நகராட்சி பகுதியில் வசித்து வரும் கலிதா, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
குடும்ப பாரத்தை தன் தோளில் சுமந்தவர். அதற்காக நான்கு வீடுகளில், எளிய வேலைகள் செய்து மாதம் 2,500 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார்.
அரசியலிலும் தீராத ஆர்வம் கொண்ட கலிதா, கடந்த 2021 சட்டசபை தேர்தல் மூலம் அவுஸ் கிராம் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கினார். ஆனால், திரிணமுல் காங்., வேட்பாளர் அபேதானந்தா தண்டரிடம் 11,815 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
எனினும், மனம் தளராமல் அரசியலில் முன்பை விட தீவிரம் காட்டினார். உள்ளூர் மக்களிடம் நெருக்கமாக பழகி, கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டார்.
அவரது ஆர்வத்தை புரிந்து கொண்ட பா.ஜ., தலைமை, தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளித்தது.
அந்த வகையில், இம்முறையும் அவுஸ்கிராம் தொகுதியில் களமிறங்கிய கலிதா மாஜி, 1,07,692 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணமுல் காங்., வேட்பாளர் ஷ்யாமா பிரசன்னாவை 12,535 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதன் மூலம், தேர்தல் அரசியலில் நுழைந்து எளிய மக்களாலும் வெற்றி பெற முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டிஉள்ளார்.
சமையல் அறையில் இருந்து சட்டசபைக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் கலிதா மாஜியின் அரசியல் பயணம், ஆழமான ஜனநாயகத்தின் வலிமைக்கு சிறந்த உதாரணமாகி இருக்கிறது.
மூலம்: தினமலர்
