நமது பிள்ளைகளுக்குச் சரியான, எதிர்காலத்திற்கு ஏற்ற, தரமான தொழில்நுட்ப கல்வியை வழங்குவதன் மூலமேயே மலையகத்தின் சிறந்த எதிர்காலம் தீர்மானிக்கப்பட முடியும். எனவே கல்வியை வழங்குவதே பெற்றோர்களின் பிரதான பொறுப்பாகும்.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய புலமையாளர் அமைப்பின் உறுப்பினரும், கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலாநிதி பி. பி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
தெல்தோட்டை, லூல்கந்துரை ஆதவன் பாடசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
கட்டடத் திறப்பு விழா பாடசாலை அதிபர் மகேந்திரன் தலைமையில் சனிக்கிழமை (25) நடைபெற்றது.
இதில் பிரதி கல்வி அமைச்சர் டாக்டர் மதுர சனிரத்தின, அரசியல் துறை சார்ந்தவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து உரையாறறிய கலாநிதி சிவப்பிரகாசம்:
லூல்கந்துரை ஆதவன் பாடசாலை 100 வருடங்களுக்கு மேல் வரலாற்றைக் கொண்டது. ஜேம்ஸ் டெய்லர் முதன்முதலில் தேயிலைத் தோட்டத்தை லூல்கந்துரையில் ஆரம்பித்தார்.
தொழிலாளர்களின் வாரிசுகள் பள்ளிக்கூடம் செல்வதற்காக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் கட்டடம் ஜேம்ஸ் டெய்லர் தங்கிச் சென்ற வீட்டின் ஒரு பகுதி என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
அக்கட்டடத்தில் இன்றும் பாடசாலை நடைபெற்று வருகின்றது. அந்தப் பின்னணியில் தான் நமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான ஒரு மேல் மாடி புதிய கட்டடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை செய்து அதிபர் முயற்சியால் இன்று பிள்ளைகளுக்குக் கையளிக்கப்படுகின்றது.
இக்கட்டடம் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு பூரணமாக இருக்கும் பொழுது, இவ்வாறான கட்டடங்களைக் குறுங்காலத்தில் அமைத்து விடுவது மாத்திரமன்றி, பிள்ளைகளின் கல்வியை சரியான முறையில் வெற்றிகரமாக வழங்க முடியும்.
அதிபர் மகேந்திரன் மிக வீரியத்துடன் இக்கட்டடத்தை முடிவுறுத்தியுள்ளார். மலையக சமூகம் கல்வி ஒன்றினால் பாத்திரமே முன்னேற முடியும் ஏனெனில் நம்மிடம் பாரிய பொருளாதார வசதிகளோ அரசியல் பலமோ வர்த்தக சக்தியோ இல்லை.
எனவே கல்வியை மையமாகக் கொண்டு மலையக சமூகத்தைத் தலை நிமிரச் செய்ய முடியும். எனவே, ஆசிரியர்கள் மாத்திரம் அல்ல, பெற்றோர்கள் சமூக நலன் விரும்பிகள், கல்வி கற்றோர் போன்ற பலரும் மலையகப் பிள்ளைகளின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
சிறிய பாடசாலைகளுக்குப் பிள்ளைகளின் கல்விக்கான மாதாந்த உதவுதொகை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பாதணிகளுக்கான கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
சில பாடசாலைகளுக்குப் போசணை உணவும் வழங்கப்படுகின்றது. இவை அனைத்தும் இலங்கை சமூகம் மாற்றமுற வேண்டும் என்றால், அதற்கு கல்வியின் அடித்தளம் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்

