கொத்மலை, கெரண்டியல்லை பகுதி…
ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் துயரமான பஸ் விபத்து, பல குடும்பங்களின் வாழ்வை ஒரே கணத்தில் சிதறடித்தது. சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்த அந்த பஸ்… கண்ணீரும் அலறலும் மட்டுமே அங்கு நிறைந்திருந்தன.

சம்பவ இடத்திலேயே 23 பேரின் உயிர் பறிபோனது. பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 28 உயிர். ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் உலகமே.

இன்று, அந்த உயிர்களை நினைவுகூரும் வகையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அதே துயர இடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைக் கொத்மலை போலீஸ் அதிகாரி இந்திக்க லலித் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதேச செயலாளர், மதகுருமார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த விபத்து நடந்த நாள்… மனிதாபிமானத்தின் உண்மையான முகம் வெளிப்பட்ட நாள். இரப்பொடகமை, கெரண்டியல்லை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுக்க முனைந்தனர்.
அந்த உதவி செய்கைகள் மனித நேயத்தின் உயர்ந்த உதாரணமாகவே நினைவில் நிற்கின்றன. ஆனால், இந்தத் துயரத்தின் வரிசை அங்கேயே முடிந்துவிடவில்லை.
அண்மையில் ஏற்பட்ட தித்துவா சூறாவளி, அதே பகுதியை மீண்டும் தாக்கியது. மண்மேடுகள் சரிந்து, சுமார் 70-இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

ஒரே பகுதி… மீண்டும் மீண்டும் மரணத்தின் சாட்சியாக மாறியது.
இன்று, அந்த இடம் வாழ்வின் சின்னமாக அல்ல… மௌனமாக நின்று கொண்டிருக்கும் ஒரு மயானமாக மாறியுள்ளது.
இந்த நிலம்… ஒருகாலத்தில் சிரிப்பொலியால் முழங்கியது. இன்று அது நினைவுகளால் மட்டும் நிறைந்துள்ளது.
ஒவ்வொரு காற்றடிக்கும் ஒலியிலும், அங்கு இழந்த உயிர்களின் கதைகள் கேட்கின்றன போலும்.
இவ்வாறு உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலி.
அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
ஆனால், அவர்கள் நினைவுகள் எப்போதும் நம்முடன் இருக்கும்.
கௌசல்யா



