மழையின்போது பெற்றோரை அழைக்கச் சென்ற மகளை மின்னல் அழைத்துக்கொண்ட சோகச் சம்பவமொன்று மொனறாகலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெற்றோர் நனைந்துவிடக் கூடாது என்று அவர்களுக்குக் குடை எடுத்துக்கொண்டு ஓடிய 23 வயது இளம் பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களின் மனத்தை உருக்கியதோடு பிரதேசத்தையே உலுக்கிவிட்டுள்ளது.
மின்னலுக்கு உயிரைக் கொடுத்த அந்தப் பெண் நமக்குப் பெரிய ஓர் எச்சரிக்கையைத் தந்துவிட்டுச் சென்றுள்ளாள்.
மழைக்காலங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட உயிரைப் பறிக்கலாம். உயிரைக் காக்கும் “மின்னல் & மின்சார” பாதுகாப்பு விதிகள்:
- இடி சத்தம் கேட்டால் உடனே வீட்டிற்குள் செல்லுங்கள்:
கான்கிரீட் கட்டடங்களே பாதுகாப்பானவை. திறந்தவெளிகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது விவசாய நிலங்களில் இருப்பதைத் தவிர்க்கவும். - மரங்களைத் தவிர்க்கவும்:
மின்னல் எப்போதும் உயரமான பொருள்களைத் தாக்கும். எனவே, மழையில் நனையாமல் இருக்க ஒருபோதும் மரத்தடியில் ஒதுங்காதீர்கள்! - உலோகப் பொருட்கள் ஆபத்தானவை:
மின்னல் நேரத்தில் குடை பிடிப்பது, சைக்கிள் ஓட்டுவது அல்லது இரும்பு கருவிகளைக் கையில் வைத்திருப்பது மின்னலை உங்கள் பக்கம் ஈர்க்கும். - மின்சாரப் பாவனை (Electrical Safety):
- மின்னல் போது டிவி, கணினி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களின் பிளக்குகளை கழற்றி விடுங்கள்.
- மொபைல் போன் சார்ஜ் போட்டபடி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
- மின் கம்பங்கள் அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
- 30-30 விதியை மறக்காதீர்கள்:
மின்னல் தெரிந்த 30 வினாடிகளுக்குள் இடி சத்தம் கேட்டால், நீங்கள் ஆபத்து வலயத்தில் இருக்கிறீர்கள்! கடைசி இடி சத்தம் கேட்டு 30 நிமிடங்கள் வரை பாதுகாப்பாக உள்ளேயே இருங்கள்.
கெளசல்யா
