கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பு நிலையம் புனரமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.அங்குள்ள பஸ் தரிப்பிடங்கள் அனைத்தும் இடமாற்றிக் குழம்பிக் கிடப்பதால் பயணிகள் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் எங்கே தேடுவேன் பாடலை மாறறிப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஹற்றன், பதுளை, பண்டாரவளை , அம்பாறை ,பலாங்கொடை, பசறை, அவிசாவளை, இரத்தினபுரி வழியாகச் செல்லும் பஸ்கள் அனைத்தும் கடந்த பல தசாப்த காலங்களாக ஒரே வளவில் நிறுத்தப்ட்டிருந்தன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும் எந்தக் குகைக்குள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
பயணிகள் பஸ்ஸைக் கண்டுபிடிக்க வேட்டை நாய்கொண்டு தேடி அலைய வேண்டியிருககிறது. இது குறித்து இங்குள்ள அதிகாரிகளிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் வினவும்போது அவர்களால் கூட உரிய பஸ் தரிப்பு நிலையத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஹற்றன், பதுளை, பண்டாரவளை ஆகிய பஸ்களில் பெரும்பாலும் தமிழ் மக்களே அதாவது மலையகம் பிரஜாவை பெருந்தோட்ட மக்களே பயணிக்கின்றனர்.
இவர்களுக்குச் சிங்களமொழி தெரியாத காரணத்தினால் இந்தப் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் கடமைபுரியும் தமிழ் மொழி ‘தன்னே நே’ உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு அதிகாரிகளை நாடும் போது அவர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை.
இஃது இவ்வாறிருக்க நீர்கொழும்பு பஸ்கள் நிறுத்துமிடம் புதிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அங்கு மழைக்காலங்களில் பயணிகள் குடை பிடித்து கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இது குறித்து உரிய தரப்பினர் ஆவன செய்ய வேண்டுமெனப் பயணிகள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
