நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08) மதியம் முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
நீர் ஏந்தும் பகுதிகளான மவுசாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்சபானை, பொல்பிட்டி, நவலக்சபானை,கலுகலை, விமலசுரேந்திரா,மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், நீர்த் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மகாவலி கங்கை, களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் தாழ் நில பகுதியில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.



தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட் வருகின்றனர்.
சிவனடிபாத மலைப் பகுதியில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மலைக்குச் செல்ல வேண்டாம் என ஹற்றன் பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாமிமலை ஓயா, மறே ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குலை, ஓயா கெசல்கமுவை ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகள் அகிவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
