நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த சில நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதிக உஷ்ணம் நிலவிவருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
குறிப்பாக மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 15 அடி குறைந்து உள்ளது கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 17 அடி குறைந்து உள்ளது
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது அதேபோல் லக்சபான, பொல்பிட்டி, நவ லக்சபான கலுகல, விமலசுரேந்திர ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மேலும் இவ்வாறான காலநிலை தொடரும் பட்சத்தில் மவுசாகலை நீர்த் தேக்கத்தின் நீர் குறைந்து முன்னைய நீரில் மூழ்கிய மஸ்கெலியா நகரம், வணக்கஸ்தலங்கள், போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கும்.
மவுஸ்சாகலை நீர்த் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான காட்மோர் ஓயா, சாமி மலை ஓயா, மறே ஓயா, சியத்தல கங்குல ஓயா, ஏனைய சிற்றாறுகளில் நீர் வரத்து மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது.
தொடர்ந்து இவ்வாறான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்படக்கூடும்.
ஆகையால் பொது மக்கள் மின்சாரத்தையும் நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



