கோப்புப் படம்
வாடகை ஓட்டோ சாரதி போல் நடித்து யக்கலை’கேடி’ ஒருவரின் போதைப்பொருளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகித்த இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் “ஐஸ்” போதைப்பொருளை விநியோகிக்கும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய ஒருவரும், அவரது சகாவும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூர்வாங்க விசாரணைகளில், மூன்று நாள்களுக்கு ஒருமுறை கொழும்பு பகுதிக்குச் சென்று போதைப்பொருளைப் பெற்று, அவற்றை விநியோகிக்கும் நபர்களிடம் ஒப்படைத்து வந்துள்ளதாகவும் ஒவ்வொரு பயணத்திற்கும் ஓட்டோ வாடகைக் கட்டணத்திற்கு மேலதிகமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பணம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டை சோதனையிட்டபோது, அங்கு மீதமிருந்த 2,450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட இடங்களில் போதைப்பொருள்களை விநியோகிக்க உதவியதாகக் கூறப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி பகுதிக்கு போதைப்பொருள்களை வழங்கியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர், இந்த சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி போல் நடித்து இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கௌசல்யா
