மறைந்த மூத்த படைப்பாளி தி. ஞானசேகரனின் இழப்பு மலையகத்திற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப் பேரவை விடுத்துள்ள இரங்கற்செய்தியில் தெரிவித்துள்ளது.
மலையகத்தின் புசல்லாவை நிவ் பீகொக் தோட்டத்தில் முப்பது வருட காலமாக தோட்ட வைத்தியராகக் (EMA)கடமையாற்றி, மலையக இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்த இலங்கையின் வடபுலத்தில் புன்னாலைக் கட்டுவன் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் தி. ஞானசேகரனுடைய மறைவு இலக்கிய உலகிற்கு பெரிய இழப்பாகும் என்று பேரவையின் செயலாளர் மருதமுத்துநவநீதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டப்புற மக்களின் துன்பியல் வரலாற்றை நேரடியாகக் கண்டு, தமது அனுபவங்களை இலக்கியமாக வடிவமைத்து, மக்களின் துன்பியல் வாழ்க்கையைத் தமது எழுத்தாற்றல் மூலம் நாடறியச் செய்த சிறந்த இலக்கிய ஆளுமைதான் தி.ஞானசேகரன்.
புசல்லாவை நியூ பீக்கொக், ஓல்ட் பீக்கொக், நயபனை, செல்வகந்தை, சப்ளி, மேமலை போன்ற தோட்டங்களில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையை நேரடியாக அவதானித்து, அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் போராட்டங்களையும் வரலாற்று உண்மை யதார்த்தத்துடன் இலக்கியத்தை ஆய்ந்த அறிவுடன் படைப்புகளாக வடிவமைத்துள்ளார்.
ஞானசேகரனின் வளமான எழுத்தாற்றலுக்கு புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள் போன்ற நாவல்களும் கவ்வாத்து குறுநாவலும் காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் ஞானம் தொடர் சஞ்சிகை போன்றனவும் சான்றாதாரங்களாகும்.
பத்து வருடங்களுக்கும் மேலாக மத்திய மாகாண இந்து சமய இணைப்பாளராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி, இந்து சமயப் பாடமும் இந்து நாகரிகமும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் நடத்தி வந்த இவருடைய மனைவி திருமதி ஞானம் ஞானசேகர ஐயர், பாட விடயதானங்களுக்கான விளக்கங்களை விட, சமயக் கிரியைகள்,சடங்குகள் தொடர்பான விளக்கங்களே அதிகம் தேவைப்படுகின்றன என்பதை கருத்தில் கொண்டு “இந்து சமயம் என்ன சொல்கிறது” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
புசல்லாவை மண்ணும் மலையகமும் இவர்களின் எழுத்தாற்றல், சமூக சேவைகள்,இலக்கியப் பங்களிப்புகளுக்காகத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆழ்ந்த இரங்கலையும் அமரர் தி ஞானசேகரனுக்கு தெரிவிக்கின்றன என்றும் திரு. நவநீதன் குறிப்பிட்டுள்ளார்.
பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன்
அமரர் தி .ஞானசேகரனின் மறைவு இலக்கிய உலகிற்கு மிகுந்த பேரிழப்பாகும். மலையக மக்களின் அவலங்களை, பிரச்சினைகளைத் தனது நாவல்கள் மூலமாக வெளி உலகிற்குக் கொண்டு சென்றார்.
மேலும் குறிப்பாக எனது சமூக மேடை நாடக நூலான புதிய சிந்தனை நாடக நூலை 2002 ஆம் ஆண்டு வெளியீடு செய்வதற்குக் காரணகர்த்தாவே தி ஞானசேகரன்தான் என்பதை நான் மறைக்கவோ மறைக்கவோ முடியாது. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவது பொருத்தமாகும்.
அமரத்துவமடைந்த ஐயாவின் ஆத்துமா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.


