தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (15) காலை 6:00 மணிக்கு வெளியிட்ட தற்கால நிலைவர அறிக்கையின்படி
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளில், 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் இதுவரை 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
நிவாரண நடவடிக்கைகள்:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 2 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது 104 பேர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையினால் நாட்டின் 8 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை தொடர்வதாக அந்த நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மின்னல்,வெள்ள அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
