சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக பாதசாரிக் கடவையில் சிறுவனை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டி CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், சீதாஎலியா சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிக் கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முற்பட்ட 11 வயது சிறுவன் ஒருவனை முச்சக்கர வண்டியொன்று மோதி காயமடைந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்து தொடர்பான CCTV காட்சிகள் ஆலயத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன.
பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது முச்சக்கர வண்டி மோதும் விதமும், அதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிடும் காட்சிகளும் CCTV பதிவில் இடம்பெற்றுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியை அடையாளம் காணும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் மூலம் முச்சக்கர வண்டி சாரதியின் தொலைபேசி இலக்கம் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த சாரதிக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். எதிர்வரும் 14ஆம் திகதி காலை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடையுமாறு சாரதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஓரளவு பாரதூரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகளும் வைத்தியசாலை வட்டாரங்களும் தெரிவித்தன.
இவ்வாறு விபத்துக்குள்ளானவர் ஹக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய திரிஸ் வொனிஸ் என்ற பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமாயணத்துடன் தொடர்புடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் தினமும் வருகை தருகின்றனர். இதனால் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வாகனப் போக்குவரத்தும் அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில், பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்தும் வாகன நெரிசலும் அதிகரித்து வருவதால், ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியைக் கடப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கூடும் இப்பகுதியில் இவ்வாறான விபத்துகள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரும் சம்பந்தப்பட்ட வீதி அதிகாரிகளும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், பாதசாரி கடவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான வீதி சமிக்ஞைகள், போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா
