கொட்டகலையில் விளையாட்டுப் பயிற்சி கூடம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலையில் இளம் விளையாட்டு வீரர்களைத் தேசிய மட்டத்திற்கு உருவாக்கும் “நியூ ஜென் அகாடமி” நேற்று (26) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேசத்திற்குட்பட்ட மாணவர்கள்,இளம் விளையாட்டு வீரர்களைப் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் முறையான பயிற்சிகளுக்கு உட்படுத்தி,தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் நோக்கில் “நியூ ஜென் அகாடமி” புதிய விளையாட்டுப் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அகாடமியின் ஆரம்ப நிகழ்வில், கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் பிரதம அதிதியாகவும் பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் சிறப்பு அதிதியாகவும் பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர், உப அதிபர், பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா இரவிச்சந்திரன்,உறுப்பினர் க. ராஜேந்திரன் உட்பட விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


மூன்று விளையாட்டுப் பட்டம் பெற்ற பயிற்றுவிப்பாளர்களின் இணைந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அகாடமி, கொட்டகலை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுத் திறமை கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களை தயார்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
