காஸாவில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து 3 வயது பாலஸ்தீன குழந்தை மீட்கப்பட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், காஸாவில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், காஸா நகரத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களைக் குறிவைத்து கடந்த புதன்கிழமை (அக். 14) அதிகாலை இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதான ரீம் அசாத் அவாத் எனும் 33 வயதான பெண் உடல் கருகி பலியாகியுள்ளார்.
இதையடுத்து, அவாதின் உடலைக் கண்டு கதறி அழுத அவரது 3 வயது பெண் குழந்தை மர்யம் கானெம் தனியே தீப்பற்றி எரிந்த அந்த வீட்டுக்குள் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், படுகாயமடைந்திருந்த மர்யமின் சத்தம் கேட்டு மீட்புப் படையினர் அவரை மீட்டுள்ளனர்.
இதில், தீயிக்கு இடையே படுகாயங்களுடன் கதறி அழுதபடி அமர்ந்திருக்கும் மர்யமை மீட்புப் படையினர் மீட்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்கச் செய்துள்ளன.
காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் மர்யம் கானெமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனெவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதலில் மர்யமின் தந்தை அஹமது கானெம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 1,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
