டயகமை ஹற்றன் பஸ் சேவையைக் குழப்பும் ரொட்டேஷன் முறை பற்றிப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
டயகமை–ஹற்றன் பஸ் சேவையில் புதிய ‘ரொட்டேஷன்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பஸ் உரிமையாளர்கள்–மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகாரிகள் இடையே சர்ச்சை உருவாகியுள்ளது.
தமக்குக் கைகொடுக்கும் வழமையான சேவையைச் சீர்குலைக்க வேண்டாம் எனப் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த சுமார் 10 வருடங்களாக டயகம ஈஸ்ட் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி காலை 7 மணிக்கும், காலை 8 நாற்பத்தைந்து மணியளவிலும் இரண்டு பேருந்துகள் வழமையாக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் கண்டியில் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், இந்த வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ரொட்டேஷன் முறையில் அதாவது சுழற்சி முறையில் இயக்குவதற்கான புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, டயகம டேவிட் பாம் வீதியில் இதுவரை ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்தது. அங்கும் ரொட்டேஷன் முறையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நேற்று மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளால் டயகம பிரதேசத்தில் விசேட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அப்போது புதிய நடைமுறையின் அடிப்படையில், நேர அட்டவணைக்கு அமைவாக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, சில பஸ் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ரொட்டேஷன் முறையில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த மூன்று பேருந்து உரிமையாளர்கள் மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சேவையில் ஈடுபட்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து, அந்தப் பேருந்துகளில் பயணித்த பயணிகளை, பொலிஸாரும் போக்குவரத்து அதிகார சபை ஊழியர்களும் இறக்கி, நேர அட்டவணைக்கு அமைவாக செல்லும் பேருந்தில் ஏறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மூன்று பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
“நாங்கள் சுமார் 20 வருடங்களாக உரிய அனுமதிப்பத்திரங்களுடன் இந்தப் பாதையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றோம். சில பேருந்துகளுக்கு டயகம நகரிலிருந்து ஹட்டன் வரையிலான சேவைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டயகம ஈஸ்ட் பாதையில் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லாத பேருந்துகளை எவ்வாறு இந்தப் பாதையில் சேவையில் ஈடுபடுத்த முடியும்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக்கோரி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். சட்டத்தரணி ஊடாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபைக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், புதிய நேர அட்டவணையின் அடிப்படையில் தங்களது பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மற்றொரு தரப்பினர் டயகம பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
கௌசல்யா
