மலைநாட்டில் கனமழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று 8 ஆம் திகதி மதியம் முதல் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் ஓடைகள்,கங்கை களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்,பண்ணையாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காட்மோர்,மோகினி எல்ல,மறே அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா ஹட்டன், மஸ்கெலியா நோட்டன், ஹட்டன் கொழும்பு பிரதான சாலையிலும் ஹட்டன் கண்டி பிரதான சாலையிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான சாலையிலும் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது.
மழை பெய்து வருவதால் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்ட நிலையில் உள்ளது. வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறும் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்து வாகனங்களை ஓட்டிச் செல்லுமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமாக இடி மின்னலுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா விசேட நிருபர்
