எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடமை புரியும் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த (2026)ஆண்டு தேசிய பாடசாலைகளில் 9 ஆண்டுகள் சேவைக்காலம் கொண்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.மாகாண மட்டத்தில் இடமாற்ற சபைகளைக் கூட்டி இந்த இடமாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, அடுத்த ஆண்டு இடமாற்றம் பெறவுள்ள ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரி நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தங்களுக்கான ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி அரச சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ள ஆசிரியர்களுக்கு இதுவரை உரிய தீர்மானங்கள் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இடமாற்ற சபையிடம் சமர்ப்பித்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரச சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளனர்.
தொடர்ந்து அதே பாடசாலையில் பணியாற்றும் நோக்கிலேயே அவர்கள் அரச சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,
அந்த மேன்முறையீடுகளுக்கு உரிய தீர்மானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறித்த ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பாடசாலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
