நுவரெலியா மாநகர சபை இலஞ்சத்திற்கு அடிமையானதால் சட்ட விரோத கட்டுமானங்களைக் கண்டுகொள்வதில்லை என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சில மாநகர சபை உறுப்பினர்களின் அழுத்தங்கள்,சில அதிகாரிகளின் சட்டவிரோத இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகர சபை சட்டத்தின் கீழ், தமது அதிகார எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய அனுமதியின்றி அல்லது சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும்
கட்டடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், எதிர்க்கட்சியினரால் வெளிக்கொணரப்படும் சில சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் நுவன் பொருதொட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் இவோன் மெதகம ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை இன்று (21) முன்வைத்தனர்.
சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் மாநகர சபையினால் அறிவித்தல்கள் வெளியிடப்பட்டாலும், அவை சட்டவிரோத நிர்மாணங்களை வெளிப்படுத்தியவர்களை
திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே வெளியிடப்படுவதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தாமதங்களும் திட்டமிட்ட முறைகேடுகளும் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மாநகர ஆணையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சில அறிவித்தல்களில், இரண்டு வார காலத்திற்குள் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும்,
இரண்டு மாதங்களுக்கு அண்மித்த காலம் கடந்துள்ள நிலையிலும் அவை அகற்றப்படவில்லை என அவர்கள் கூறினர்.



சில இடங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் அகற்றப்பட்டு, தொடர்ந்து நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,
இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மாநகர சபை பொதுக் கூட்டங்களில் எந்தவொரு நபருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படாமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டாலும்,
இதையும் வாசியுங்கள்: நுவரெலியா பொருளாதார மையத்தில் மரக்கறி சேகரிப்பு நிலையம்
நடைமுறை நிலைமை அதற்கு மாறுபட்டதாக உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர, 2010 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா நகர எல்லைக்குள்
மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித தராதர வேறுபாடுகளும் இன்றி சட்டம் அமுல்படுத்தப்படும் என மாநகர முதல்வர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோத நிர்மாணங்களின் பின்னணியில் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரச அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தால்,
அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹைல்
