பிரதியமைச்சர் பிரதீப்புடன் இராதா கிருஷ்ணன் எம்பி சந்திப்பொன்றை இன்று (08) நடத்தியுள்ளார்.
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை, மலைக மக்கள் முன்னணயின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் எம்பி சந்தித்து மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்..
அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மொனறாகலை தோட்டப் பகுதிக்கு பிரதியமைச்சர் பிரதீப் நேரடி விஜயம்
மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
மலையகத்தின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பிரதி அமைச்சர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை எனவும்,
மக்கள் மத்தியில் அதன் சாதகமான தாக்கங்கள் தென்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மையான இலக்கு எனவும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
மலையகத்தின் நிலையான அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி பிரதியமைச்சர் பிரதீப்புடன் இராதா எம்பி நடத்திய இந்தச் சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முக்கியமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
