விவசாயப் பயிர்களைப் பாதுகாக்கவெனக் கூறி, மிருக வேட்டையாடியவரைச் சுட்டிக்காட்டிய செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவமொன்று ஹற்றன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை, கொமர்சல் நேத்திரா பிளேஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் காணி ஒன்றில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர், தனது காணியில் வனவிலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக கம்பிப் பொறிகளை அமைத்திருந்தமை தொடர்பாக தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, இந்த ஊடகவியலாளர் தொழில் நிமித்தமாக கொழும்புவில் இருந்த சமயத்தில், விவசாயக் காணியின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் அவரது செல்லப் பிராணி நாய் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நபரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அப்பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய இந்தச் சட்டவிரோத பொறிகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அதற்குப் பதிலளித்த அந்த நபர், கம்பி வலைகள் தனது காணிக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் அதில் எவருக்கும் தலையிடத் தேவையில்லை எனக் கூறியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 10 ஆம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதாகவும், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில், பல சட்டவிரோத கம்பிப் பொறிகளை மீட்டதுடன், சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்காக அழைத்ததாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், இதற்குப் பழிவாங்கும் நோக்கில் மல்லிகைப்பூச்சந்தி பகுதியில் வைத்து ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கைச் சூழல் மற்றும் அப்பாவி உயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அந்தப் பொறுப்புணர்வோடு செயற்பட்ட ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
சட்டவிரோத வேட்டை நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் உள்ளது. ஆனால், இவ்வாறான சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் தாமதமாகவோ அலட்சியமாகவோ மேற்கொள்ளப்படுமானால், எதிர்காலத்தில் சமூக நலனுக்காக குரல் கொடுப்பவர்களே அச்சமடையக்கூடிய சூழல் உருவாகும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகளின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்களாகும்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கௌசல்யா
