குரங்குகளின் அதிகரித்த பெருக்கமும் அவற்றின் அட்டகாசங்களும் காரணமாக மலையகத் தோட்டப்புறங்களிலுள்ள வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்பவர்கள், விவசாயிகள் தங்களின் பயிர்ச் செய்கைகளில் பெரும் சேதங்களையும் பொருளாதார நஷ்டங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

குரங்குகளின் தொல்லையிலிருந்து தமது விவசாய நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காக புசல்லாவை நிவ் பீகொக், ஓல்ட் பீகொக் தோட்ட மக்களால் கையாளப்படும் வித்தியாசமான அணுகுமுறைகள் வெற்றியளித்து வருவதுடன், அவை ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் காணப்படுகின்றன.

குரங்குகளைப்போல உடைகள், முகமூடிகள் அணிந்து கொண்டு அவை போல அசைவுகள், அட்டகாசங்கள் செய்து அவற்றை நீணட தூரத்திற்குப் போகும் வரை விரட்டும் நடவடிக்கைகளில் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், புசல்லாவை நிவ் பீகோக் ,ஓல்ட் பீகொக் தோட்டப் பகுதிகளுக்குத் தற்போது குரங்குகள் வருவது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அசேதனப் பொருள்களற்ற இயற்கையான பழ வகைகள், மரக்கறிவகைகள்,கண்கவர் சிறுபொருள்களைச் சுவைத்துப் பயன்படுத்திடக் கூடிய வாய்ப்புகள் இப்பகுதி மக்களுக்குக் கிடைத்துள்ளன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
