“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” – இரத்தினபுரி மே தின மேடையில் பிரதி அமைச்சர் பிரதீப் எழுச்சி உரை
இந்த நாட்டில் மிகப்பெரிய மாற்றமாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை நாம் அமைத்திருக்கின்றோம். உழைக்கும் வர்க்கத்தின் அரசாங்கமான இதனை பாதுகாப்பது எமது கடமை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இன்று (01) இரத்தினபுரி நகரில் நடைபெற்ற மாபெரும் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதியமைச்சர் உரையாற்றினார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார,ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், பெருந்திரளான மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
மழை பெய்தால் இரத்தினபுரி நகரம் வெள்ளத்தால் மூழ்கி விடும் என்று பொதுவாக கூறுவார்கள் . ஆனால் இன்று செம் மே தினத்திலே இரத்தினபுரி நகரம் சிவப்பு தலைகளாலே மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் மிகப்பெரிய மாற்றத்திற்கு மத்தியிலே நாம் நாட்டிலே தொழிலாளர்களின் அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக நாட்டில் உழைக்கும் மக்கள் எல்லாம் அணித்திரண்டு இருக்கின்றார்கள்.
கடந்த ஆட்சி காலத்தின் திருடர்களும் கொள்ளையர்களும் சிறைக்கு செல்வதற்காக இன்று வரிசையில் இருக்கின்றார்கள். பய மிகுதியால் கூச்சல் இடுகிறார்கள். எங்களுடைய அரசாங்கத்தை பார்த்து அவர்கள் பொய்யான விடயங்களை கூறி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். கொழும்பிலே சஜித் அணியினர் உருட்டு பிரட்டு திருட்டு என்று அவர்களது மே தின கூட்டத்திற்கு தலைப்பாக வைத்திருக்கின்றார்கள். அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்றாற் போல் சரியாகத்தான் அவர்கள் இந்த திருட்டையும் பிரட்டையும் உருட்டையும் வைத்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் உழைக்கும் மக்களின் உன்னதமான சக்தி தேசிய மக்கள் சக்தி. இந்நாட்டில் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் மலையக மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டார்கள். அவர்களுடைய வாக்குகளை பெற்றார்களேயொழிய அவர்களுடைய வாழ்க்கை தரத்தை எந்த அரசாங்கமும் உயர்த்த நினைக்கவில்லை. அடுத்த மே தினத்தில் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என சென்ற மே தினத்திலே நாங்கள் கூறினோம். கூறியவாறே தொழிலாளர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்திருக்கின்றோம்.
அன்பார்ந்த தோட்ட தொழிலாளர்களே, இன்று பேசப்படுவது மலையக மக்களுக்கான காணி உரிமையும் வீட்டு உரிமையும். இந்த அரசாங்கத்தினால் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த முடியாது முதலில் கூறினார்கள். நாம் உயர்த்தி காட்டி இருக்கின்றோம். இன்று மலையக மக்களுக்கான காணி உரிமையும் வீட்டு உரிமையும் இந்த அரசாங்கம் வழங்காது என கூறுகின்றார்கள். மிக விரைவிலே மலையக மக்களுக்கு வீட்டு உரிமையும் காணி உரிமையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
உலகத்திலே அமையப்பெற்ற அரசாங்கங்களில் உன்னதமான அரசாங்கம் ஒன்றுதான் இன்று இலங்கையில் அமைந்திருக்கின்றது எங்களுடைய ஜனாதிபதி தோழர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் மூவின மக்களிளும் சமமாக நேசிக்கின்ற ஒரு தலைவராக கிடைத்திருக்கின்றார். இனியும் வரலாற்றில் அவ்வாறான ஒரு தலைவன் கிடைப்பதில்லை.
இது எங்களுடைய அரசாங்கம், எங்களுடைய தலைவன். இந்த மக்களின் அரசாங்கத்தை பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.









