மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக , கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லை மீள்நிர்ணய குழு அமைக்கப்படவுள்ள நிலையில், ஏற்கனவே உடன்பட்டதற்கிணங்க மஸ்கெலியா பிரதேச செயலகத்தை அமையப் பெறுவதை வலியுறுத்தும் வகையில் மஸ்கெலியா பிரதேச சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற் றுமாறு மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மலையக அரசியல் அரங்கத்தினருக்கும் மஸ்கெலியா பிரதேசசபைத் தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் அம்பகமுவை பிரதேச செயலகத்தை நோர்வுட், அம்பகமுவ, மஸ்கெலியா என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என முன் மொழிவு செய்யப்பட்டது.
எனினும் அப்போது நடைமுறையில் இருந்த 2012 ஆம் ஆண்டு எல்லை மீள்நிர்ணயம் தீர்மானத்துக்கு அமைய இரண்டாகப் பிரிப்பது என்றும், 2021 ஆம் ஆண்டு எல்லை மீள்நிர்ணயத்தின்போது மூன்றாவதாக மஸ்கெலியாவில் மேலதிக ஒன்று உருவாக்கப்படும் என்றும் உடன்பாடு காணப்பட்டது.
எனினும், கொரொனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டு எல்லை மீள்நிர்ணயம் இடம் பெறவில்லை. அதே நேரம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எல்லை மீள்நிர்ணய குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழு அமையப் பெற்றால் அதற்கு சமர்ப்பிக்கக் கூடிய வகையில் மஸ்கெலியா பிரதேச சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைப்பது மஸ்கெலியா பிரதேச மக்களின் கோரிக்கையை வலுப்படுத்துவதாக அமையும்.
இப்போதைக்கு மஸ்கெலியா பிரதேச மக்கள் பயன்பாட்டுக்கு என நோர்வுட் பகுதியில் அமைக்கப்பட்ட பிரதேச செயலகத்தையும் அரசாங்கம் ஹட்டன் நகருக்கு மாற்றிக் கொண்டுள்ளது.
இதனால் மஸ்கெலியா பிரதேச மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் மஸகெலியா பிரதேச சபை பிரதேசத்தை மையப்படுத்திய பிரதேச செயலகம் ஒன்றை உருவாக்கக் கோரும் தார்மீக கடப்பாடு மக்கள் சபை என்ற வகையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மயில்வாகனம் திலகராஜா, அரங்கத்தின் தலைவி அருளப்பன் இதயஜோதி, உபதலைவரும் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினருமான சிவன் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரங்கம் முன்னெடுக்கும் மக்கள் மனுவில் கை எழுத்திட்டு மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் ராஜ்குமார் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
