இரத்தினபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பநிலை அதாவது 38°C இற்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்மாவட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட இதர பணிகளிலீடுபடும் தோட்டத் தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை பொது வெளியில் பொதுமக்களை செல்ல வேண்டாமென சுகாரத் துறையினரும் அரசாங்கமும் அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்ததற்கமைய முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை கொழுந்து பறிக்காமல் நிழலான பகுதியில் இருக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களால் தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் சுமார் 20 – 22 கிலோகிராம் கொழுந்தினைப் பறிக்க முடியாது போய்விடுகிறது.
அவ்வாறு தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் கொழுந்தினைப் பறிக்க முடியாது போய்விட்டால் அன்றைய தினம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படுகின்றது.
இதனால் தாம் வெயிலையோ உஷ்ணத்தையோ கவனத்தில் கொள்ளாது காலை முதல் மாலை வரை வழமைபோல் கொழுந்து பறிப்பதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலை முதல் மாலை வரை கொழுந்து பறித்தாலும் இந்த வெயில் காலத்தில் தோட்ட நிருவாகம் எதிர்பார்க்கும் கொழுந்தினைத் தம்மால் பறிக்க முடியாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தாம் முகங்கொடுப்பதால் தோட்ட நிருவாகம் நெருக்கடிகளை தளர்த்தி தமது வாழ்வாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
