இரத்தினபுரி மாவட்டத்தின் தோட்டப் பகுதிகளுக்கான இ.போ.ச சேவை சீரின்மை காரணமாக தோட்ட மக்களும் அவர்களின் பிள்ளைகளான மாணவர்களும் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
இரத்தினபுரி நகரிலிருந்து சில தோட்டங்களுக்கு சேவையிலீடு படுத்தப்படும் பஸ்களில் பெரும்பாலானவை பல வருடங்கள் சேவையிலீடுபட்டு வரும் பழைய பஸ்களாகும். இவை சுமார் 20- 30 வருடங்களுக்கு மேல் சேவையிலீடுபடுத்தப்படும் பஸ்கள் என்பதனால் அடிக்கடி பழுதடைந்து பாதி வழியிலேயே இடை நிறுத்தப்படுகின்றன.
ஒரு சில தோட்ட மக்களும் அவர்களின் பிள்ளைகளும் தனியார் பஸ்களிலேயே பெருந்தொகைப்பணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டடுள்ளனர். பண வசதியில்லாதவர்கள் இ.போ.ச பஸ்ஸையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
காவத்தை -வில்லம்பிய தோட்ட பஸ் காலையில் வில்லம்பியவிலிருந்து (காலை 5.30) காவத்தை நோக்கி சென்ற போதிலும் மாலை 6.30 மணிக்கே காவத்தையிலிருந்து வில்லம்பிய நோக்கிச் செல்கின்றது. காலையில் இப்பஸ்ஸில் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கள் பாடசாலை விட்டுத் தனியார் பஸ்களில் வீடு திரும்ப வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது போன்று இரத்தினபுரி – மில்லவிட்டி, டேனாகந்தை, இறத்கங்கை,ஹப்புகஸ்தன்னை, நிரியெல்லை முதலான தோட்டங்களிலும் பிரச்சினை காணப்படுகின்றது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று தோட்ட மக்கள் கோரிக்கை விக்கின்றனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
