எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்று (21) சனிக்கிழமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்ற பௌசர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனினும், இன்று கொடுக்க வேண்டியதை நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறது கூட்டுத்தாபனம்! மே மாதம் வரை எந்தச் சிக்கலும் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம் கொலன்னாவ முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே நேற்று (20) தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இன்று கொலன்னாவ முனையத்திற்கு வந்த பவுசர்கள் எரிபொருள் இன்றித் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் திரு. மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது:
“நேற்று இரவு வரை 10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான டீசலை நாங்கள் விநியோகித்தோம். அதேபோல் 7,000 மெட்ரிக் தொன் பெட்ரோலையும் விநியோகித்தோம்.”
“சாதாரணமாக ஒரு நாளைக்கு நாங்கள் 4,880 மெட்ரிக் தொன் டீசலையே விநியோகிப்போம். அந்த வகையில் நேற்றைய தினம் இரு மடங்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.”
“மே மாதம் முதல் வாரம் வரை எம்மிடம் எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.” என்றார்.
