இலங்கையின் இன்றைய எரிபொருள், எரிவாயு பிரச்சனையானது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இது இலங்கையின் பிழையான அரசியல் நகர்வுகளினால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்று கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவிக்கின்றார்.
இது மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தின் ஒரு விளைவாக ஏற்பட்ட ஒரு விடயமாகும். எனவே இன்றைய அரசாங்கம் இதற்கு மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை, என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயலாற்றுகை நிறைவேற்று குழு உறுப்பினரும், தேசிய புலமையாளர் அமைப்பின் உறுப்பினருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
கடந்த வார இறுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயலாற்றுகை குழு உயர் பீடம் கூடி நாட்டின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்தது.
இது இலங்கை சார்ந்த ஒரு பிரச்சனை அல்ல. பிழையான அரசியல் நகர்வுகளை ஏற்படுத்தியமையினால், அல்லது பிழையான தீர்மானங்களை எடுத்ததனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சனையல்ல.
எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளமை, எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளமை, எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளமை, எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ யுத்தத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளமை, விமான நிலையங்களும், துறைமுகங்களும் தாக்கப்பட்டுள்ளமை, போன்ற பல்வேறு பிரச்சனைகள் இன்றைய இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கின்றன.
இலங்கையானது கிட்டத்தட்ட 7.5 பில்லியன் டாலர்களை கையிருப்பில் வைத்துள்ளது. வாய்ப்புகள் கிடைக்கும் போது நாட்டிற்கு தேவையான எண்ணெய் இறக்குமதி செய்யப்படும். மக்கள் சரியான தகவல்கள் பற்றி தெரியாமல், முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் சர்வதேச சூழ்நிலையை உணர்ந்து தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்து கொள்வதன் மூலம், பிரச்சனைகளுக்கு ஒரளவு தீர்வு காணலாம்.
இலங்கை மக்கள் புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுப்பார்கள். என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்படி கூட்டத்தின் போது குறிப்பிட்டார்.
மேலும் இன்று பல எதிர் தரப்பு அரசியல் பிரிவினர், மற்றும் இன, மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாட்டு சூழ்நிலைகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
சில ஊடகங்கள் கூட இவ்வாறான விடயங்களைச் செய்து வருகின்றன. ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே தான் QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஊடாக மக்கள் தங்களுடைய மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். வீண் விரயங்களை தவிர்க்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிலர் பல்வேறு ஊழல் விடயங்களிலும், விலைகளை உயர்த்தி விற்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அரசாங்க தரப்பினர் மிகக் கவனமாக அவதானித்து வருகின்றனர்.
இலங்கையின் எண்ணை தேவையானது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும், மசகு எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பெறப்படுகின்றன.
ஹோமோஸ் கால்வாய் மூடப்பட்ட ஒரு சூழ்நிலையில் எண்ணெய்ப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அதே நேரம் இந்தியாவுக்கு மாத்திரமே இந்த போக்குவரத்து பாதையை பயன்படுத்துவதற்கு ஈரான் அனுமதிய அளித்துள்ளது.
எனவே தற்பொழுது இலங்கை இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்தப் பிரச்சனையானது யுத்தத்தின் நீடிப்பை பொறுத்து மதிப்பீடு செய்யக்கூடியது.
இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு நாடுகளும் தரப்பினர்களும், ஐக்கிய நாடுகள் சபையும் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்
எனவே எரிபொருள் விலையேற்றம் என்பது ஒரு தற்காலிகமான பிரச்சனையாகும். இது கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை அனைவரிடமும் காணப்படுகின்றது என்று சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
