வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வயதெல்லையைப் பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளை ஊர மட்டங்களில் மேற்கொள்ளுவதற்கு கிராம சேவையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா. .இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலத்திற்குக் காலம் புதிய வாக்காளர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை கிராம சேவையாளர் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. அப்போது பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழில், கல்வி போன்ற நடவடிக்கைகள் காரணமாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
மலையகத்தில் பல்வேறு தோட்டங்களுக்குக் கிராமசேவையாளர், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள், விவசாய உத்தியோகஸ்தர்கள் போன்றவர்கள் செல்வதே இல்லை.
இந்தநிலையில் புதிய வாக்காளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமைபெறுமா என்பது சந்தேகமே! என்று தெரிவித்துள்ள திரு. இராஜேந்திரன்,
ஆகவே, தேர்தல்கள் திணைக்களம், பிரதேசசெயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், கிராமசேவையாளர்கள் புதிய வாக்காளர்களை இணைத்துக் கொள்வதற்கு மக்களின் குடியிருப்புகளுக்குக் குறிப்பாக பெருந்தோட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று தகவல் திரட்டுவதை உறுதிப்படுத்தவேண்டும்!
அது சாத்தியப்படாவிட்டால் அரசாங்கம் தலையிட்டுத் தற்காலிக உத்தியோகஸ்தர்களையாவது நியமித்து, வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களைப் புதிய வாக்காளர்களாகப் பதிவுசெய்யும் நடைமுறைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் திரு. இராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
வட்டவளை நிருபர் திருக்கேதீஸ்வரன்
