இரண்டாவது நாளாகவும் சாமிமலை கவரவலை தோட்டத்தில் சத்தியாக்கிரகம் தொடர்ந்து வருகிறது.சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொலிஸார் தலையிட்டுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நேற்று 5 ஆம் திகதி காலை 7.30 இற்கு மஸ்கெலியா சாமி மலை பகுதியில் உள்ள ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தின் கவரவலை தோட்டத்தில் முகாமையாள ரினால் தான்தோன்றித் தனமாக பணி இடைநிறுத்தம் செய்யபட்டதாக எட்டுத் தொழிலாளர்களும் தொழிற் சங்க பேதமின்றி அதே தோட்டத்தில் உள்ள ஆலய வளாகத்தில் இரவு பகலாக தங்களது சத்தியாகிரகப் போராட்டத்தை மேற் கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று 5 ஆம் திகதி கவரவலை தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரிவுகளில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொண்டனர்.
இன்றைய தினம் 6 ஆம் திகதி கவரவலை ஏ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் கவரவலை பீ பிரிவு தொழிலாளர்கள் பாதிக்க பட்ட 8 தொழிலாளர்களும் பணி நிறுத்தப்பட்ட 44 நாட்களின் வேதனத்துடன் மீண்டும் தொழில் வழங்கும் வரை பணிக்குச் செல்வதில்லை எனக் கோரிக்கை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பு மேற் கொண்டு வருகின்றனர்.
இன்றைய தினம் தொழிலாளர்கள் சார்ந்த தொழிற் சங்கவாதிகள் அங்கு சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கினர்.
குறிப்பாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர், தேசிய அமைப்பாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவித் தலைவர், மாவட்ட பிரதிநிதி அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் கட்சித் தலைவர், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆறுதல் கூறினர்.
நாளை காலை ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி காரியாலயத்தில் கவரவலை தோட்ட முகாமையாளர் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 8 தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த தொழிற் சங்க அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


