இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும்
இணைந்து நடத்திய விருது விழாவில் கண்டி இரா. அ. இராமன் வாழ் நாள் சாதனையாளய் விருது பெற்றுள்ளார்.
26ஆவது முறையாக நடைபெறும் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுன்ட் லவினியா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி நடைபெற்றது.
கண்டி பூரணவத்தையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த இரா.அ இராமன், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.
இலங்கைத் தமிழ் இலக்கியம் ஊடகம் மற்றும் பண்பாட்டுத் துறையில்
முக்கிய பங்களிப்பு செய்துள்ள எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும்
செயற்பாட்டாளராவார்.
குறிஞ்சித்தேனி, பூரணவத்தை காகுத்தன் என்றபுனைபெயர்களில் மலையகப் பகுதிகளில் அறியப்படும் அவர், தினக்குரல் பத்திரிகையின் கண்டிக்கிளை முகாமையாளராக 18 ஆண்டுகள் கடமையாற்றி 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஊடக மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்தும் இளைஞரைப் போன்று ஈடுபட்டு வரும் இராமன் மக்கள் கலை இலக்கிய
ஒன்றியத்தின் தலைவராகவுள்ளார்.
முன்னதாக கண்டித் தமிழ் சங்கத்தின் செயலாளர் மற்றும் கைலாசபதி
ஆய்வு மையத்தின் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
இலக்கிய உலகில் “இவர்கள்” “இது கதையல்ல நிஜம்’ ஆகிய நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார். “அம்மா”, “பூரணம்” ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கண்டி இலக்கியச் செய்திமடல், “இனி” போன்ற மாதாந்த செய்தி பத்திரிகைகளின்
ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது இலக்கியச் சேவைகளுக்காக மாகாண மற்றும் தேசிய விருதுகள்
வழங்கப்பட்டுள்ளன.
பன்விலை ம. நவநீதன்
