திக்கோயா வணராஜா பழையகாடு பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் காசல்ரீ – நோட்டன்பிரிட்ஜ் வீதியூடான போக்குவரத்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் தடைப்பட்டதாக ஹற்றன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் ஹட்டன் டிக்கோயா காசல்ரி பிரதான வீதியில் நேற்று 11.10.2026 இரவு சுமார் 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
வீதியின் குறுக்கே பாரிய மரம் வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பிரதேசவாசிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து மரத்தின் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாலை வேளைகளில் கடும் மழையுடன் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது.
எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் சீரற்ற காலநிலையின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மஸ்கெலியா நிருபர்
