160ஆவது பொலிஸ் தினத்தையொட்டி ஹற்றனில் இரத்ததான முகாம் இன்று (03) நடைபெற்றது.
160ஆவது பொலிஸ் தினத்தையொட்டி ஹட்டன் பொலிஸாரால் ஐந்தாவது முறையாக இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் சமூகப் பணியாக ஏற்பாடு
இலங்கை பொலிஸின் 160ஆவது ஆண்டு நிறைவையொட்டி பொது மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ், ஹற்றன் தலைமையகப் பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் இன்று (03) ஹட்டன் தலைமையகப் பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.


காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்ச்சியின் பிரதான நோக்கம், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தத்தை வழங்கி மனிதாபிமான பணியில் பங்களிப்புச் செய்வதாகும்.
சட்டம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் நிறுவனமாக மட்டுமன்றி, பொதுமக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுடன் நெருக்கமாகச் செயற்படும் நிறுவனமாகவும் பொலிஸார் செயற்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் பொலிஸாருக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர மற்றும் கொட்டகலை இராணுவ முகாமின் பிரிகேடியர் சாகர பெரேரா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்புக் குழு ஆலோசனைச் சபையும் ஹட்டன் தலைமையக பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு குடாகம ‘ரிவிசந்த’ மகளிர் சங்கம் தீவிர ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.
மேலும், KPL Foundation, CT Groups மற்றும் ஹட்டன் லயன்ஸ் கழகம் – Lions Club of Hatton 306-D10 ஆகியன இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியுள்ளன.
ஒரு இரத்தத் துளி மற்றுமொரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தீர்மானகரமானதாக அமையக்கூடும் என்பதால், இவ்வாறான இரத்ததான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் மூலம் சமூகப் பங்களிப்பை அதிகரித்து, நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான இரத்தக் கையிருப்பைப் பேணுவதற்கு பங்களிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், பொலிஸ் அதிகாரிகளின் சேவையைப் பாராட்டுவதில் மாத்திரம் மட்டுப்படாமல், பொதுமக்களுடன் இணைந்து மனிதாபிமானப் பணியில் ஈடுபடுவதன் மூலம் பொலிஸாருக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா குறூப் நிருபர்
