வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி. எம். ஆர். டி. அபொன்சு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, இன்று (17) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் அவரிடம் கையளித்தார்.
நிதி, பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி. எம். ஆர். டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.
உலுனாவ றோமன் கத்தோலிக்க பாடசாலை, மொறட்டுவை உயன ஆரம்பப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் கற்ற அபொன்சு கெப்பெட்டிபொல மகா வித்தியாலயத்தில் கனிஷ்ட இடைநிலைக் கல்வியையும், பண்டாரவளை புனித ஜோசப் கல்லூரியில் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியையும் பூர்த்தி செய்துள்ளார்.
அவர் உறுகுணு பல்கலைக்கழகத்தில் (1994) பௌதிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளிமண்டல பௌதிகவியலில் முதுகலை பட்டத்தையும், அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அத்துடன் ஜப்பானின் IDEAS (Institute of Developing Economies Advanced School) நிறுவனத்தில் அபிவிருத்தி ஆய்வுகள் தொடர்பான பட்டத்தையும், அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அவரது அரச சேவைக் காலத்தின் போது, தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட பல பிரதான நிறுவனங்களிலும் கல்வி அமைச்சிலும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, அவர் உறுகுணு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் துறை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் (SLIDA) திட்டமிடல், அபிவிருத்திப் பொருளியல் துறைக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் சிரேஷ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் (IHRA) முதுகலை பாடநெறிகளுக்கான திட்ட முகாமைத்துவம் தொடர்பான வருகைதரு விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
