பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு பாராட்டியுள்ளது.
ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்புவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அக்குழுவினர், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் ஏனைய பல நாடுகளை விடவும் இலங்கை மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையின் எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சோனாலி ஜெயின்-சந்திரா (Sonali Jain-Chandra) தலைமையிலான இப்பிரதிநிதிகள் குழு, இலங்கை அடைந்துள்ள பொருளாதார மீட்சிப் பிரகதியையும் நாட்டின் மீண்டெழும் திறனையும் பெரிதும் பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
