காது கடிபட்ட பெண்ணின் முறைப்பாட்டுக்கு செவிசாய்க்காத நுவரெலியா பொலிஸார் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காணித் தகராற்றில் அயல் வீட்டாரிடம் காதைப் பறிகொடுத்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு, நுவரெலியா பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீத்தாஎலியா, போலகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவருக்குச் சொந்தமான காணி தொடர்பில், அயல் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெண்ணின் காதை அந்த நபர் கடித்துத் துப்பியுள்ளார்.
காணியின் பாதை பிரச்சினையால் காதை பறிகொடுத்த அந்தப் பெண்ணின் முறைப்பாட்டுக்கு நுவரெலியா பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டிருப்பதாகப் பெண்ணின் சார்பில் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள, United Human Rights Organization அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரியா கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டுக்கு, நுவரெலியா பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் United Human Rights Organization அமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட HRC/HAT/58/26/N என்ற முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா–ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் 2026 ஜூலை 31ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் இந்தப் பரிந்துரை நுவரெலியா பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.
காணிக்கு முன்னால் அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவதற்கு நோனா பட்டோன் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரது காதை அந்த நபர் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் 2026 மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த காலங்களில் ஊடகங்களிலும் வெளியாகி, பிரதேசத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சம்பவம் தொடர்பில் உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்கள் வெளிப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவிக்கிறது.
அத்துடன், பெண்ணின் காதைக் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில சந்தர்ப்பங்களில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை காணப்பட்டதாகவும், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் நெருங்கியும் நீதியைப் பெறவில்லை
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டைத் தாக்கல் செய்த United Human Rights Organization அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய, சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களை நெருங்கியுள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரணீதா வர்ணகுலசூரிய,
“கிராம உத்தியோகத்தரும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை விட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக எமக்குத் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது தனிநபர்களின் பின்னணிகளின் அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என வலியுறுத்திய அவர், அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
“பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் நாம் கோருவது, இந்தப் பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதாகும்” என பிரணீதா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா நிருபர் – ஆர். எப். எம். சுஹைல்
