மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் உரொட்டி ‘தன்சலை’ ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (01) ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கெப் வாகனம் ஒன்று நேற்றிரவு மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட ‘தன்சலை’க்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
சம்பவத்தில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கெப் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில் கொடகமை சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கௌசல்யா
