ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600இற்கும் மேற்பட்ட மதனமோதக போதை மாத்திரைகள் பறிமுதல்.
பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து சட்டவிரோதமாக மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் மஸ்கெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, அவர் விற்பனை செய்வதற்காக கடையில் மறைத்து வைத்திருந்த 648 சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (19) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேச பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் மஸ்கெலியா நகரில் ஒரு ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடையை நடத்தி வருவதாகவும், கடைக்கு வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 250 என்ற விலைக்கு சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்
