மலையகம் வாழ் தமிழ்ச் சமூகத்தின் கல்வி அடையாளமாகத் திகழும் ஹட்டன் – ஹைலன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் மே 24 ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
பாடசாலையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை, அர்ப்பணிப்புடன் ஆசிரியர்களை இயங்கச் செய்கின்ற ஆளுமை இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர் தான் பிரதி அதிபர் சுகுமார்.
பாடசாலையினது வெற்றிகள் கூட்டுப் பொறுப்புடன் செயற்படும் பிரதி அதிபராலும் சாத்தியமாகலாம் என்பதற்கு சுகுமார் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
1966 மே 25 இல் பொகவந்தலாவையில் பிச்சை, ஆண்டாள் ஆகியோரின் மூத்த புதல்வராகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தோர் மூவராவர்.இவரின் மனைவியும் ஓர் ஆசிரியை.(திலகவதி)
1988ஆம் ஆண்டு PSETP இரண்டாம் தொகுதி நியமனத்தினூடாக ஆசிரிய பணிக்குள் காலடி எடுத்து வைத்தார். ஏறத்தாழ 38 வருடங்கள் இச்சமூகத்திற்காக சிறந்த கல்விப்பணியாற்றியுள்ளார்.
இவரது முதல் நியமனம் மஸ்கெலியா மறே கீழ்பிரிவு பாடசாலையாகும். ஈராண்டுகள் அங்குக் கடமையாற்றிய பின், 1990-1991 காலப்பகுதியிலே கொட்டகலை எதன்சைட் கலாசாலையில் ஆரம்பக்கல்வி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.
அப்பயிற்சிக்காலத்திலே கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் தனது திறமைகளைச் சிறப்புடன் வெளிப்படுத்தியுள்ளார். வாண்மைத்துவப் பயிற்சிக் காலத்தின் பின்னர் பொகவந்தலாவையின் உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள லின்ஸ்டட் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக ஈராண்டுகளும் பதில் அதிபராக ஏழு ஆண்டுகளும் அதிபராக ஆறு ஆண்டுகளும் பணி புரிந்துள்ளார்.
இப்பாடசாலையில் சேவையாற்றிய காலப்பகுதியிலேயே (2000அம் ஆண்டு) இவர் இலங்கை அதிபர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இப்பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதன் முதலாக ஒரு மாணவன் சித்தி பெற்றது இவரது காலத்திலாகும்.
இதைத்தவிர இப்பாடசாலையின் பல்வகை வளர்ச்சியலும் சிறப்பான பங்களிப்பினை நல்கியுள்ளார். 2006 இடமாற்றத்தின் அடிப்படையில் டிக்கோயா ஸ்ரீவாணி ஆரம்பப்பிரிவு அதிபரானார்.
அங்குப் பணியாற்றிய காலப்பகுதியில் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி ரீதியான அடைவுகள், போட்டி நிகழ்வுகள் என்பவற்றிலே மாணவர்களிடம் வளர்ச்சி நிலையை ஏற்படுத்தினார்.
2012ஆம் ஆண்டு ஹட்டன் – ஹைலன்ஸ் கல்லூரியில் ஆரம்பப்பிரிவுக்கான பிரதி அதிபராக இணைந்து கொண்ட இவர், ஏறத்தாழ 14 ஆண்டுகள் அதிபர்களான எஸ். விஜயசிங், ஆர். ஸ்ரீதர், தற்போதைய அதிபர் எஸ். ராஜன் ஆகியோரின் காலப்பகுதியில் செயலாற்றல் மிக்க பிரதி அதிபராகப் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கின்ற அதிபர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தளவு கல்லூரியின் ஒவ்வோர் அசைவிலும் இவரது சிந்தனையும், செயலூக்கமும் கலந்திருக்கிறது.
ஆசிரியர்களிடம் கண்டிப்பாக இருந்தாலும், அவர்களது ஆளுமையைக் கண்டறிந்து அதை மாணவர்களுக்குப் பயன்பட வைக்கும் சாதுரியம் இவரின் தனித்தவமாகும் என்று பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் அகிலன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் சேவையிலிருந்து ஒய்வு பெறும் திரு. சுகுமார் இன்று மே 25 அறுபதாவது அகவையில் கால்பதிக்கின்றார். அவருக்குக் கல்விச் சமூகம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
கௌசல்யா
