வட்டவளையில் இடம்பெயர்ந்த மக்கள் சுப்பிரமணியர் ஆலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வட்டவளை நகர்,புறநகர் பகுதிக்கு கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் கடும் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளன.
பலர் வட்டவளை சுப்பிரமணியர் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு உடனடியாக பகலுணவு தயார்செய்யமுடியாதநிலையில் முதற்கட்டமாக அம்பகமுவை பிரதேசசபை உறுப்பினர் இரா. இராஜேந்திரனின் ஏற்பாட்டில் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இவர்களுக்கான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக வட்டவளை கிராம உத்தியோகஸ்தரோடு கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்பகமுவை பிரதேசசெயலகத்தின் ஊடாக இரவு முதல் சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



வட்டவளை கிராம உத்தியோகஸ்தர் திரு. செளந்தர் தெரிவிக்கையில், வெள்ளத்தில் அகப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிகளில் வட்டவளை அகரவத்தை, கரோலினா பகுதி இளைஞர்கள் -தம்பி ஜோன்சிங், ஆசிரியர் பூபாலன் தலைமையிலான இளைஞர் குழு- மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை பாராட்டத்தக்கது.
வெள்ளநீரில் அடித்துச்சென்ற பெண்ணொருவரை மீட்டமை பலரது கவனத்தை ஈர்த்தது. அனர்த்த காலத்தில் அந்த இளைஞர்களின் பணி மிக மகத்தானது. அவர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
துரதிஷ்டவசமாக குரா என்ற சுமார் 50 வயது மதிக்க நபரொருவர் வட்டவளை பாலத்தருகில் மகாவலி கங்கை ஆற்றுவெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட சில மணித்தியாலங்களில் மரணமடைந்து மீட்கப்பட்டமை துயரச் செய்தியாகும்.
ஆகவே இதுபோன்ற காலங்களில் பொதுமக்கள் ஆறுகள், நீர்நிலைகளைக் கடக்கும்போது மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், வட்டவளை நகரை அண்டிய லொனக், அகரவத்தை, மவுன்ட் ஜீன், கரோலினா தோட்டப்பகுதி மக்களும் வட்டவளை ஞானானந்தா கிராமம், டெம்பள் ஸ்டோ காலனி (குறுக்குவாடி) உட்பட பல்வேறு பகுதியிலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அரச நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தமது பேரிடர் அனர்த்த நிவாரண பணிக்குழு தாயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கேதீஸ், வட்டவளை
