இரத்தினபுரியை மீண்டும் அச்சுறுத்தும் களுகங்கை பெருக்கெடுப்பால் மாநகரம் வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் களுகங்கையின் நீர் மட்டம் 19 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் களுகங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
எலப்பாத்தை, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கராங்கொடை, திமியாவை, சமன் தேவாலயப்பகுதி, தம்புளுவனை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இம்மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 500 இற்கு மேற்பட்ட மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாநகரம நேற்று (03) மாலை ஆறு மணியளவில் வெள்ளத்தால் மூழ்கத் தொடங்கியது



இரத்தினபுரி மாநகரத்தில் உள்ள அல்மக்கியா முஸ்லிம் ம.வி, சீவலி மகா வித்தியாலயம், ஸ்ரீ சுமனா ம.வி. இரத்தினபுரி சீவலி மைதானம் என்பன நீரில் மூழ்கின.
முழு மாநகரத்தையும் களுகங்கை வெள்ளம் மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் தயாராகி வருகின்றது. மக்களும் வழமைபோன்று தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
