மனிதநேயத்துடன் செயற்பட்டு மனித உயிரையும் செல்வத்தையும் காப்பாற்றிய தலவாக்கலை பொலிஸார்!
25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகை, ரொக்கப்பணம் ஆகியவற்றுடன், தெருவோரத்தில் மயங்கிக் கிடந்த ஒருவரைக் காப்பாற்றி மனித நேயத்தைப் பறைசாற்றியுள்ள தலவாக்கலை, போக்குவரத்துப் பொலிஸாருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை, அடையாளம் தெரியாத ஒருவர், தலவாக்கலை நகரின் தெருவோரத்தில், மயங்கிக் கிடந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ நகரத்தில் எந்தவொரு பரோபகாரியும் முன்வரவில்லை அல்லது இருக்கவில்லை. விடயம், தலவாக்கலை பொலிஸாரின் கவனத்திற்குச் செல்கிறது. உடனே செயலில் இறங்கிய தலவாக்கலை போலீஸ் நிலையத்தின், போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி , சுகத் மடுகல்ல உள்ளிட்ட குழுவினர், மயங்கிக் கிடந்த நபரை, கிளங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுசேர்க்க, நடவடிக்கை எடுத்தனர்.
அத்தோடு, மயங்கி விழுந்து கிடந்த நபரிடம், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகை, ரொக்கப்பணம், விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி உள்ளிட்ட, பெருமதிவாய்ந்த பொருள்கள் இருந்திருக்கின்றன. அவை அனைத்தையும், பாதுகாப்பாக எடுத்து, போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இன்றைய தினம், அந்த நபரின் உறவினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, அனைத்துப் பொருள்களையும் கையளித்துள்ளனர்.
மனித நேயம் குறைந்து வரும் இன்றைய உலகில், அது தலவாக்கலை பொலிஸாரின் வடிவத்தில், இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை எண்ணி, அந்தப் பகுதி ஊர்மக்கள் அவர்களை வியந்து, பாராட்டி வருகிறார்கள்.
கடமையை மாத்திரம் செய்யாது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட, தலவாக்கலை போலீஸ் நிலைய உத்தியோகத்தர்களை, சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தார் மாத்த்திரம் அல்லாது, சமூகத்தில் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர். மயக்கம் அடைந்த நிலையில், கிளங்கன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த நபர், இன்றைய தினம் குணமடைந்து சுகதேகியாக வீடு திரும்பியுள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அனைவருக்கும் மலைக்குருவியின் மனமார்ந்த பாராட்டுகள்.
கௌசல்யா


